Spilling out content through fingertips

Last updated on Sunday, September 22, 2024 , 20:18

கடைசி உலகக் கோப்பை - லப்பர் பந்து பதிப்பு (பாகம் 1)

story surreal tamilpost human
Written on September 22, 2024

Warning: This story has a narrative which partially alludes to recently released movies - Kadaisi Ulaga Por and Lubber Pandhu. No direct spoilers. எச்சரிக்கை : இந்த கதையில் கடைசி உலக போர் மற்றும் லப்பர் பந்து திரைப்படங்களைக் குறிப்பிடும் கதை சொல்லாடல் பயன்படுத்தப்பட்டு உள்ளது. Disclaimer: All names and characters which appear in this story are fictional. பொறுப்புத் துறப்பு: இக்கதையில் இடம்பெறும் பெயர்கள் மற்றும் கதாப்பாத்திரங்கள் யாவும் கற்பனையே.

இந்தக் கதை 2011 இல் தொடங்குகிறது. மட்டைப்பந்து உலகக்கோப்பையில் இந்திய அணி அபார வெற்றி பெற்று இவ்விளையாட்டை இளைஞர்களிடையே எழுச்சி பெற வைத்தது. 10 ருபாய்க்கு விற்றுக்கொண்டு இருந்த ஸ்டும்பேர் லப்பர் பந்தை சிறுவர்களும் பெரியவர்களும் அதிகப்படியாக வாங்கி ஆறு ஓட்டங்கள் அடித்து பந்தைத் தொலைத்தனர். ரப்பர் மரங்களுக்கு ரணங்கள் புதிது இல்லை என்றாலும், இப்படி தொலைக்கப்பட்டு மீட்கப்படாத அந்த லப்பர் பந்துகளால் உலகின் ரப்பர் உற்பத்தி பாதிக்கப்பட்டது. அதிகப்படியான ரப்பர் பால் உற்பத்தி சாத்தியம் இல்லாமல் போகத்துவங்கியது. ஆனாலும் மக்கள் இடையே மட்டைப் பந்தின் மீதான மோகம் குறையவில்லை. மக்களின் தேவையைப் பூர்த்தி செய்ய இயலாமல் பல நிறுவனங்கள் திணறின.

இந்நிலையைத் தனக்கு சாதகமாக பயன்படுத்த துடித்தான் ஒருவன். அவன் பெயர் நெட்டு ராசு. லப்பர் பந்து மீதான தேவையையை கட்டுக்குள் கொண்டு வந்தால், இந்த நிறுவனங்களைத் தனது கைக்குள் போட்டு வைத்துக்கொள்ள முடியும் என்று நம்பினான். அதற்கு முதல் படியாக, அந்த விளையாட்டின் மூலதனத்தை அறியவேண்டும். தனக்கு இவ்விளையாட்டைப் பற்றி ஒன்றுமே தெரியவில்லை என்பதை உணர்ந்த அவன், ஒரு மட்டைப்பந்து பயிற்சி மையத்தில் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்தான்.

மட்டைவீச்சு, பந்துவீச்சு, மைதானத்தில் பந்தை நோக்கிய பாய்ச்சல் போன்ற வித்தைகளைக் கற்றுத் தேர்ந்தான். அடுத்த கட்டமாக, இந்திய அணியில் இடம் பெற பல உள்ளூர் போட்டிகளில் பங்குபெற்றான். ஆனால், அவனது திறமையைக்கண்டு யாரும் வாய்ப்பு அளிக்கவில்லை. இந்த ஒரு வருட மைதான வாசத்திற்குப்பிறகு, தான் தேர்வு செய்த பாதை, நீளமானது என்பதை உணர்ந்தான். உடனடியாக, தனது மட்டையை விற்று, ஒலிவாங்கி கொண்டு வந்தான். திறன் பேசியில் உள்ள புகைப்பட கருவியின் உதவியுடன் தெருவில் இறங்கி மக்களிடம் மட்டைப்பந்து பற்றிய கருத்துகளை ஒளி / ஒலியோடு பதிவு செய்து இணையத்தில் அயராது பதிவு செய்யத்தொடங்கினான். இந்த இணையப்படங்களைக் கண்ட உலகப்புகழ் பெற்ற தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்று, அவனது பேச்சைக் காசாக பணப்பரிமாற்றம் செய்ய முன்வந்தனர். இதுதான் தனக்கான நேரம் என்பதை உணர்ந்த அவன், உடனடியாக அந்நிறுவனத்தின் பணியாளாக பணி புரியத்துவங்கினான்.

நாட்கள் வேகமாக ஓடத்துவங்கின. அடிமட்ட பணியாளாக இருந்த அவன், தொலைத்தொடர்பு பற்றிய அனைத்து முக்கியத் தகவல்களையும், தொழில் நுணுக்கங்களையும் அறிந்து கொண்டு, அதன் மூலம் தனது பணியில் உயர்ந்த நிலையை படிப்படியாக அடைந்திட முனைந்தான். தனது பேச்சுத்திறனையும், மொழி வளத்தையும் வளர்த்துக்கொண்டான்.

சில வருடங்கள் கழித்து, தான் அடைய நினைத்த பொறுப்பை அடைந்தான். வருடம் 2023 ஆகியிருந்தது. 35 ரூபாய்க்கு லப்பர் பந்து விற்கப்பட்டு கொண்டுள்ள காலகட்டம் இது. இனிமேல் அவனது கையில் தான் அந்நிறுவனத்தின் ஒளிபரப்பு அதிகாரம் என்பதானது நிலை. தனது இந்த புதிய பொறுப்பின் மூலம் இந்திய மட்டைப்பந்து ஆணையத்தின் (BCI) தலைவரான வெற்றி ஷாவுடன் நட்பு வளர்த்தான். இந்திய அணியின் ஆட்டங்களை ஒளிபரப்பும் வருமானத்தில் இருந்து சிறு தொகையை வெற்றி ஷாவுக்கு வழங்குவதாக இருவரும் ரகசிய ஒப்பந்தம் ஒன்று போட்டனர். அதன் படி, தங்களது தொழில் தொடர்பான, அதிகச் செலவு வைக்கும் தேவைகளை வெற்றி ஷாவும் நெட்டு ராசுவும் ஒன்றன் பின் ஒன்றாக பூர்த்தி செய்து கொண்டனர். இதன் மூலம் வெற்றி ஷாவிடம் ஒரு நன்மதிப்பு பெற்று இருந்தான் நெட்டு ராசு. இதன் மூலம், தனக்கு தேவைப்படுகிற ஒரு மிகப்பெரிய உதவியை வெற்றி ஷா செய்யும் நேரம் கடைசியாக வந்தது.

இந்த நொடிக்காகவே இத்தனை நாள் பொறுமை காத்து இருந்தான் நெட்டு. தனது மனதின் ஓரத்தில் பூட்டி வைத்து இருந்த மட்டைப்பந்து மீதான ஆவலை மீண்டும் திறந்து விடுவதற்கான நேரம் வந்து விட்டது என்பதை உணர்ந்தான். லப்பர் பந்தின் தயாரிப்பு செலவை குறைத்து, அதன் உற்பத்தியை அதிகரித்து, இந்திய இளைஞர்களுக்கு லப்பர் பந்து விற்கும் தனி ஒரு லாபகரமான நிறுவனம் ஒன்றைத் தொடங்க முற்பட்டான். வெற்றி ஷாவின் உதவியுடன், அதனை இந்தியா முழுவதும் விற்பனை செய்வது மட்டும் இல்லாமல், சர்வதேச போட்டிகளில் பயன்படுத்தவும் அனுமதி வாங்குவதே அவனது திட்டமாக இருந்தது.

இதன் முதல் பகுதியாக, அந்தப் பந்தின் முழு அறிவியல் தகவல்களும் அவனுக்குக் கிடைக்க வேண்டும். தன் கீழ் பணி புரியும் “ஆய்வு மேற்கொள்ளும் அணி”யை அழைத்து, லப்பர் பந்தை பற்றி ஒரு அறிவியல் ஆய்வுக்கட்டுரை எழுதித் தரக்கேட்டான்.

அந்நேரம், அனைவரது திறன் பேசிகளும் நினைவுபடுத்தும் ஒலியை வெளியிட்டன. என்னவென்று அனைவரும் தொடுதிரையைப் பார்த்தனர்.

“சர்வதேச மட்டைப்பந்து சம்மேளனத்தில் (ICC) இருந்து இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகள் விலகல். இந்திய அணியின் வளர்ச்சிக்கு மட்டும் துணை போவதாக குற்றச்சாட்டு. அந்நாடுகள் இணைந்து புதியதாக… சர்வதேச சமத்துவ மட்டைப்பந்து சம்மேளனம் (IECC) எனும் அமைப்பைத் தொடங்கின. இதன் கீழ் இணையாத அணிகளுடன் போட்டிகள் மற்றும் சுற்றுப்பயணங்கள் நடைபெறாது. வரும் உலகக்கோப்பையில் எங்கள் அணிகளும் பங்கேற்காது. இதுவே நீங்கள் நடத்தும் கடைசி உலகக்கோப்பை என நினைத்துக்கொள்ளுங்கள் என பகிரங்க மிரட்டல்!”

இந்தச் செய்தியைப் படித்த அவன் முகத்தில் ஈயாடவில்லை. கைகளும் கால்களும் அசையவில்லை. சிறிது நேரம் உணர்வற்றுப்போனான். சிறிது நேரம் ஆழ்ந்த யோசனையில் ஆழ்ந்தான். 2023 - நம் இந்திய நாடு நடத்தும் உலகக்கோப்பை வருடத்தில் சரியாக குறிவைத்துத் தாக்கியிருக்கிறார்கள். இதனை ஒளிபரப்பும் உரிமையை பல்லாயிரம் கோடி குடுத்து வாங்கியிருந்தான். இதன் பிரதிபலனாகவே லப்பர் பந்து பற்றிய தனது கோரிக்கையை முன்வைக்கக் காத்திருந்தான். மனதில் படபடப்புடன் வெற்றி ஷாவை திறன் பேசியில் அழைத்தான்.

அங்கு வெற்றி ஷாவோ , மேலும் பதட்டத்துடன் பேசிக்கொண்டு இருந்தான். IECC செய்தியில் வெளியிடாத சில ரகசிய கோரிக்கைகளை தன்னிடம் பகிர்ந்ததாகக் கூறினான். “உங்கள் உலகக்கோப்பை மட்டுமே நடக்காது என நினைக்காதீர்கள். நீங்கள் எங்கள் கூட்டமைப்பில் சேரவில்லை என்றால், உன் நாட்டில் உள்ள மட்டைப்பந்து ஆர்வலர்களின் வருங்காலக் கனவில் தீ வைப்போம். உனக்கு 24 மணி நேரக்கெடு விதிக்கிறோம்.”

இதைக்கேட்ட நெட்டு, வெற்றியிடம் அவனுடைய பதிலைக் கேட்டான். அவனோ, தனது அதிகாரத்தை விட்டு கொடுக்கமாட்டேன், இந்தப்பதவியை அடைய நான் பட்ட பாடு எனக்கு தான் தெரியும், முடிந்தால் உங்களால் ஆவதைப்பார்த்துக்கொள்ளுங்கள் என்று சவால் விடுத்து இருக்கிறான். ஏன்டா உங்க அப்பா பட்ட கஷ்டத்தை உன் பேரில் எழுதுகிறாய் என நெட்டுவுக்கு கேட்கத் தோன்றியது. அந்த எண்ணத்தைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டு, தொழில் நோக்கில் தன்னுடைய கேள்விகளை முன்வைத்தான். உலகக்கோப்பையை நடத்தா விட்டால், அதில் முதலீடு செய்த அத்தனை காசும் என்னாவது என்று கேட்டான் நெட்டு. அது போனால் போகட்டும், எனக்கு என்னோட கொவுரவம் தான் முக்கியம், ஆங்கிலேயனுக்கு அடிமையா இருக்குறத கைவிடு என நெட்டு வுக்கு அறிவுரை வழங்கி தொடர்பைத் துண்டித்தான் வெற்றி ஷா. இப்போது இவனிடம் பேசி ஒன்றும் ஆகப்போறது இல்லை என்பதை உணர்ந்த நெட்டு ராசு, அடுத்த நாள் பார்த்துக்கொள்ளலாம் என வீட்டுக்குச் சென்று உறங்கினான்.

அடுத்த நாள் காலை எழுந்த நெட்டு, பல் துலக்கிக்கொண்டு செய்தி வாசிப்பைப் பார்த்தான். “இன்றைய முக்கிய செய்தி - இந்தியா முழுவதும் உள்ள ரப்பர் மரக்காடுகளில் தீப்பற்றியது. ரப்பர் உற்பத்தி பாதிப்பு…. இந்திய மட்டைப்பந்து வாரியத் தலைவர் வெற்றி ஷா மாயம், போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர். “ அப்போது நெட்டு வின் மூளையில் ஒரு குண்டுபல்பின் ஒளி வீசியது. இது IECC வின் வேலை என்பதைப்புரிந்துகொண்டான். ரப்பர் மரங்களை அழிப்பது மூலம், லப்பர் பந்துகளின் உற்பத்தி பாதிக்கப்படும். அது இல்லையெனில், மட்டைப்பந்து விளையாடுவதற்கான பந்துகளின் விலை உச்சத்தைத் தொடும். இதனால், வருங்கால கனவுகளோடு விளையாடி வரும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பல வீரர்கள் பாதிக்கப்படுவர் என்பதைக் கணக்கில் கொண்டு தான் இந்த தீவைப்பு சம்பவம் அரங்கேறி உள்ளது என்பதை புரிந்து கொண்டான். அதை விட, தன்னுடைய லாப கரமான தொழில் திட்டம் பாழாய்ப்போனதை எண்ணி வருத்தம் அடைந்தான்.

BCI இன் துணைத் தலைவர் ராஜர் ராபிட் ஐ தொடர்பு கொண்டு வெற்றி ஷா வின் நிலையை அறிய முயன்றான். அவரும் தனக்கு வெற்றி ஷாவின் இடம் தெரியவில்லை என்று தெரிவித்தார். மேலும், IECC இன்னும் சில நிபந்தனைகளை விதித்து உள்ளத்தைப்பற்றி அவர் கூறினார். BCI அலுவலகத்தில் இன்று மாலை ஒரு முக்கிய சந்திப்பு நடைபெற உள்ளத்தைப்பற்றி ஒரு கொசுறு தகவலையும் சேர்த்துக் கூறினார். இந்திய மட்டைப்பந்தின் முடிசூடா அரசன் இல்லாத இந்த தருணத்தில் ஒரு சந்திப்பு என்பது, தன்னுடைய வருங்காலத்திற்கு பாதகமாய் முடியும் என்று முடிவு எடுத்த நெட்டு, உடனடியாக விமானப்பயணம் மேற்கொண்டு மும்பையை அடைந்தான். வெற்றி ஷா இல்லாத இந்த தருணத்தில், அவனுடைய நெருங்கிய நண்பனாக இந்த கலந்தாலோசிப்பில் பங்கேற்றான்.

அதில் IECC ஆட்கள் பேசியது: “ரப்பர் மரங்கள் எரிந்த செய்தியைக் கேட்டு இருப்பீர்கள். இது எங்கள் திட்டத்தின் ஒரு பகுதி தான். நாங்கள் விடுத்த கோரிக்கையை தூசியெனத் தட்டிய வெற்றி இன்று எங்கு சுற்றியும் கிடைக்கவில்லை என்கிறார்கள். எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு தலைவருடைய நண்பன் என்று நீ கூறுகிறாய். இப்பொழுது எங்களுடைய கோரிக்கை, நிபந்தனையாகி விட்டது. எங்கள் நிபந்தனைப்படி, கால்பந்து, இறகுப்பந்து, வலைப்பந்து போன்ற விளையாட்டுகள் எப்படி ஒரே மாதிரியான பந்தை பயன்படுத்துகிறது, அது போல மட்டைபந்தும் ஒரே மாதிரியான பந்துகளை பயன்படுத்த வேண்டும். கார்க் மீது தோல் தைக்கப்பட்டு, வண்ணம் அடிக்கப்பட்ட பந்துகளில் மட்டுமே மட்டைப்பந்து விளையாடப்பட வேண்டும். அதன் நோக்கமாகவே ரப்பர் மரக்காடுகளில் தீ பற்றியது. உங்கள் மக்கள் இந்த ரப்பர் மற்றும் வலைப்பந்துகளை பயன்படுத்தி குறைந்த செலவில் மட்டைப்பந்து விளையாட்டை கற்று தேர்ந்து விடுகின்றனர். அப்போது எங்கள் விளையாட்டு வீரர்கள் அதிக செலவு செய்து உங்கள் ரப்பர் பந்து விளையாடும் வீரர்கள் அளவுக்கு திறமையை வளர்த்தால், அவர்கள் செய்த செலவுக்கு அர்த்தம் என்ன? உங்களது அண்டை நாடுகள் ஏற்கனவே எங்களுடைய கொள்கைக்கு ஒப்புதல் அளித்து விட்டனர். இனியும் நீங்கள் எங்கள் அமைப்பில் சேர மறுத்தீர்கள் என்றால், உங்கள் உள்ளூர் ஆட்டத்திற்கு கூட அண்டை நாட்டினர் மற்றும் வெளிநாட்டினர் யாரும் வரப்போவது இல்லை. உங்களின் மட்டைப்பந்து கனவிற்கு முற்றுப்புள்ளி வைத்துக்கொள்ளுங்கள்.”

இதற்கு பதிலடி கொடுக்க நெட்டு வுக்கு எண்ணம் வரவில்லை. தன் பல கோடி முதலீடே கண்முன் தோன்றியது. ஒப்புக்கொள்கிறோம் என சரணடைய அவனுடைய வாய் சொல்ல வந்தது… ஆனால் அதைக்கட்டுப்படுத்திக்கொண்டான். தான் இங்கு அரசன் இல்லை, ஒரு வெளியாள் என்பது அவனது நினைவுக்கு வந்தது. அவன் அமைதி காத்த வேளையில், ராஜர் ராபிட் தன் பேச்சைத் தொடங்கினார். இந்திய வாரியம் தனது முடிவில் உறுதியாக இருப்பதாக தன் பேச்சை முடித்தார். IECC தங்களது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினர். கடினமான அந்த மாலை கலந்தாலோசிப்புக்கூட்டம் முடிவுக்கு வந்தது. பங்கேற்றவர்கள் அனைவரும் இறுக்கமான முகங்களோடு வெளியில் வந்தனர். ஊடக நண்பர்கள் அவர்களை சூழ்ந்தனர். ராஜர் ராபிட் ஓ வேறு ஒரு வழியில் வண்டி நிறுத்துமிடத்திற்கு வந்து சேர்ந்தார். நெட்டு வும் அவரை பின்தொடர்ந்து சென்று அவரைச் சந்தித்தான். அவனைக் கண்டதும் ராஜரின் முகத்தில் சோர்வே உருவான ஒரு முகப்பாவம் தோன்றியது.

நெட்டு வுக்கு ஒரு கேள்விக்கணையைத் தொடுத்தார். “ஏன் என்னை பின்தொடந்து இங்கு வரை வந்தாய், அதான் கூறினேனே, நாம் அவர்கள் நிபந்தனைகளுக்கு செவி சாய்க்கப்போவது இல்லை என்று?” . அவனும் பதில் அளித்தான். “அப்போது என்னைப்போன்ற முதலீட்டாளர்களின் பணம் என்னாவது? பல்லாயிரம் கோடிகளை கொட்டியுள்ளோமே உங்கள் கிணற்றில்?”. “தேசத்தின் மானமே முக்கியம். அதற்கு ஏற்ப அவர்களிடம் பேசு என்று மேலிடத்தில் இருந்து கொடுக்கப்பட்ட கட்டளைக்கு ஏற்ப தான் நான் செயல்பட்டேன். நம் தேசத்தின் பெருமைக்காக செலவு செய்தாய் என நினைத்துக்கொண்டு இதைபற்றி மறந்து விடு.” என்று கூறி நெட்டு வின் வாயை அடைத்தார் ராஜர். பின்பு தன் வண்டியில் ஏறி அவ்விடத்தை விட்டு விரைந்தார்.

நெட்டு வின் மனதில் கோபம் கொப்பளித்தது. தேசப்பற்று என்று சொல்லி பல கோடிகளை சுருட்டிய இவர்களை ஏதாவது செய்ய வேண்டும் என மனம் துடித்தது. வன்முறையிலோ நேரடி சண்டையிலோ இந்த கோபத்தைத் தீர்க்க முடியாது. சர்வதேச போட்டிகளோ, சர்வதேச வீரர்களோ இல்லாமல் போட்டி நடத்த முடியாமல் போனால் என்ன, நமது ஊர்களில் சிறப்பான வீரர்களுக்கு என்ன குறை? என்று எண்ணினான் நெட்டு. அந்த நொடியில், அவனது மனதில் ஒரு எண்ணம் தோன்றியது. நம் ஊர்களில் நடக்கும் லப்பர் பந்து போட்டிகளை உலகக்கோப்பை போன்று நாமே நடத்தி, அதனை சர்வதேச அளவில் ஒளிபரப்பு செய்தால் என்ன? இந்த எண்ணத்துடன் வீட்டுக்கு விரைந்தான் நெட்டு, வில்லத்தன சிரிப்போடு. ஏனென்றால், இது அவனுடைய கதையல்ல. அவன் ஒரு அரச குருவாக இருக்க ஆசைப்பட்டானே ஒழிய, அரசனாக அல்ல. அவன் எதிர்பார்த்த அரசனைத் தேடிய பயணம் அவனே அறியாமல், அன்றிலிருந்து தொடங்கியது.

(தொடரும்)

இதன் மூலம் இரண்டாம் பகுதிக்கான முன்னோட்டமும் வாசகருக்கு கொடுக்கப்பட்டது.