Spilling out content through fingertips

Last updated on Sunday, September 22, 2024 , 20:18

தினுசான திரை அனுபவம்...

story rants review human tamilpost
Written on August 30, 2023

இந்நிகழ்வு நடந்து ஏறத்தாழ ஒன்றரை மாதங்கள் இருக்கும் . வார இறுதியில் வெளியாகி இருந்த அந்த ரசிகர்கள் கொண்டாடும் வெற்றிப்படத்தின் இரண்டாம் நாள் அனுமதிச்சீட்டுகளை இணையத்தின் மூலம் முன்பதிவு செய்து மிக ஆவலுடன் விரைந்து அந்த பல்லடுக்கு திரையரங்கத்திற்கு நடந்து சென்றேன். சூரியன் அந்தியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த நேரத்தில், கருமேகங்கள் கூடி காற்றின் போக்கில் ஆடி, வெயிலின் தணிவை நாடிய சாமானியனின் எண்ண ஓட்டத்திற்கு மதிப்பளித்தது சிறிது ஆறுதல் தந்தது. எனினும், நிலப்பரப்பில் வெப்பம் முழுதுமாக தணியவோ , செந்தழல்வேந்தன் துயிலில் ஆழ்ந்து வெண்-விண்-மென்னொளி சுந்தரன் ஆட்சிக்கட்டிலில் அமர வேண்டும்.

அவ்வாறு நடந்திடாத பட்சத்தில் , மனித சரீரத்தின் வற்றாத உப்பு நீரால் ஆன நதியோடி குளிர்ச்சியை உண்டுவிக்கும் . அதில் நனைந்தவாறு செயற்கை குளிரூட்டப்பட்ட விற்பனை வளாகத்தின் வாயிலில் நுழைந்தேன் . எதிர்பார்த்தது போல மக்கள் வெள்ளம் இருக்கவில்லை. ஏனென்றால் சென்னையில் வார இறுதிகளில் வெப்பம் தாழ்ந்த மாலை நேரமாகவே குடும்பங்கள் திரையரங்குகளுக்கு கொண்டாட படை எடுக்கின்றன. முன்பு கூறியவாறு, பெரும்பாலும் ரசிகர்கள், நண்பர்கள்,”இணை”யர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்கள் போன்றோரே இவ்வாறான நேரங்களில் தென்படுவர்.

அவ்வாறான ஒரு திரைப்பட ஆர்வலனாய் அன்றைய தினத்தில் மிகவும் விரைவாக அந்த திரை அரங்கின் வாசலை அடைந்தேன். சிறிது நேரம் முன்பாக கிளம்பியிருந்தால் இந்த விரைவுகளை குறைவாகப் பயன்படுத்தியிருக்கலாம். அரங்கின் உள்நுழைந்து இரண்டாம் வரிசையில் உள்ள ஒரு சிவப்பு சொகுசு இருக்கையில் அமர்ந்து பெருமூச்சு விட்டேன். நல்ல வேலையாக சிவப்பு திரைப்பட அரக்கன் வெள்ளித்திரையில் உதயம் ஆகியிருக்கவில்லை.

மின்விளக்குகள் அணைக்கப்பட்டன. திரையிடல் தொடங்கப்பட்டது. ஒளி / ஒலி தொழிற்நுட்பங்கள் என்னென்ன பயன்படுத்தப்பட்டுள்ளன என்ற குறும்படங்கள் முடிந்த பின்பு பெரும் படம் தொடங்கியது. சிவப்பு அரக்கன் உதயமானான் . கதை மாந்தரின் பெயர்களுக்கு முன்னாள் கதை வாசிப்பவரின் பெயர் வந்து பெரும் ஆரவாரத்தை உண்டு பண்ணியது. கதையின் முன்னுரையை ஓவிய வடிவில் எடுத்து உரைத்தவாறு படம் தொடங்கியது. மிகுந்த ஆர்வத்துடன் அடுத்த இரண்டரை மணி நேரத்தை நோக்கி திரையின் மீது கவனத்தைத் திருப்பினேன் .

homelander-cinema

சிறிது நேரத்தில் துப்பாக்கிச் சூடு சத்தங்கள் என் வலது புறத்தில் இருந்து ஒலித்தது. ஆனால் இப்படம் “ஜான் விக்” இல்லையே… கதை அமைதியுடன் தொடங்கியிருக்கும் போது இது என்ன தொடர்பில்லாத சத்தம் என்று என் கவனத்தை வலப்பக்கமாகச் சிதறடித்தேன். அங்கு ஒரு பள்ளிச்சிறுவன், திரையை உற்று நோக்கியவாறு அமர்ந்து இருந்தான். ஆம். தனது திறன்பேசியின் திரையை உற்று நோக்கியிருந்தான். கவனம் எங்கும் சிதறவில்லை. இன்றைய தலைமுறையின் பிரபலமான இணையப் போர்க்களத் துப்பாக்கிச்சூடு விளையாட்டில் அதிகப்படியான ஒலி அளவை வைத்துக்கொண்டு மூழ்கி இருந்தான்.

தலையணி கேட்பொறி ஒன்றை அணிந்து கொண்டு அவன் விளையாடி இருந்தால் ஒன்றும் ஆகியிருக்காது. ஆனால் மிகுந்த சத்தத்துடன் பார்வையாளர்களை எரிச்சலூட்டும் விதமாக அந்தச் சிறுவன் செயல்பட்டு கொண்டிருந்தான். மூன்று இருக்கைகள் தள்ளி அமர்ந்து இருந்த எனக்கு அந்த ஒளி கவனச் சிதறலை ஏற்படுத்துமாயின் , அவனுக்கு முன் இருக்கையில் அமர்ந்து இருப்பவரின் எண்ண ஓட்டத்தை எண்ணிப்பாருங்கள். சில நொடிகள் கழித்து , முன் இருக்கை பார்வையாளர் திரும்பி பார்த்து , ஒலி அளவை குறைத்து விளையாடப்பா என்று கடிந்து கொண்டார். அந்த சிறுவனும் அதைக் கேட்டுக்கொண்டு அளவைக்குறைத்தான். ஆனாலும் விளையாட்டைத் தொடர்ந்தான். இதை விளையாட வேண்டும் என்றல் எதற்கு பணம் செலவு செய்து இங்கு வந்து உட்கார்ந்து இருக்க வேணும் என மனசாட்சி பேசியது.

ஆனால், எனது பக்கத்தில் அமர்ந்து இருந்த இணையர்களில் ஒருவர் வேறு விதமாக பேசினார். “இந்தப் பையன் பெரிய ரசிகன் போல இருக்கிறது, ஆரம்பக்காட்சிகளை படமெடுத்து சமூக வலைத்தளங்களில் நிலைச்செய்தியாக வைப்பதற்காக அப்படிச் செய்கிறான்” என பேசினார். மனதில் சிரித்தவாறு திரைப்படத்தில் கவனத்தைத் திருப்பினேன்.

இடைவேளையை நெருங்கிய போது , வலது பக்கம் தலை திருப்பினேன் . அச்சிறுவன் மாயமாய் மறைந்து இருந்தான். இடைவேளை முடிந்து திரையிடல் தொடர்ந்த போதும் அச்சிறுவன் தென்படவில்லை. வீரன் மக்களுக்காக தன் அனுமதிச்சீட்டையே தியாகம் செய்தான் என்று ஒரு அசரீரி கூறியது. புன்னகைத்தவாறு திரைப்படம் காண்பதைத் தொடர்ந்தேன் .