Spilling out content through fingertips

Last updated on Sunday, September 22, 2024 , 20:18

தேர்வினால் திரியும் நிகழ்காலக் கயிறு

rants tamilpost human
Written on January 5, 2021

ஊரடங்கு காலத்திலே சீர்மிகுத்தேர்வு முறையாகக் கருதப்படுவதுதான் இந்த “ நான்கில் ஒரு பதில் தேர்வு செய்க” முறையாகும். மேற்கோளிட்ட சொற்கள் மூலமாக படித்து பல தேர்வுகள் எழுதிய நமது கைகள், கணிப்பொறியின் சுட்டியில் கெட்டியாக பதில் தேர்வு செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். கைகளை விட கண்களுக்கு அதிக வேலை கொடுக்கிறோம், நேர்கோட்டை விட்டு அகலாமல் இருப்பதற்கு. மேசையில் தட்டிய ஓசையுடன் மிதந்து வரும் இரு மதிப்பெண் கேள்விகளுக்கு வேலையில்லாமல் போனது என்னவோ தற்காலிகமாகத்தான்.
மனிதன் நேர்கோட்டு வாழ்வை வாழ்வதில்லை. தன்னுடைய விருப்பங்களே எதிர்காலத்தைக் கட்டமைக்கிறது. அவ்வாறு இருக்கையிலே, நாம் எதிர்கொள்ளும் வலைத்தேர்வுகளில் இருப்பது போன்று முடிவை மாற்றிக்கொள்ளும் உரிமை நம்மிடம் கொடுக்கப்படுவது இல்லை. அவ்வராகிய வலைப்பின்னல்களிலே சிக்கி மேலோட்டப்பார்வை காணும் நிலைக்கும் நாம் தள்ளப்பட்டு விடாமல் பார்த்துக்கொள்வதும் நம் கைகளில் தான் உள்ளது.

தன்னுடைய தவறைத் திருத்திக்கொள்வதற்கான வைப்பு திடீரென வழங்கப்பட்டுவிட்டது என்றால், அது கண்டிப்பாக மேலும் தலைவலிகளைத் தான் உண்டாக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. நாம் கண்டுகளித்த காலப்பயணத் திரைப்படங்கள் பலவற்றிலும் பல்வேறு விதமாக இச்சிக்கலைக் கையாண்டிருப்பார்கள். இருப்பினும், பொதுஜனத் திரைப்படம் என்பதால் நெடி முழக்காமல், சுருக்கமாகவும், தெளிவாகவும் இச்செயல்பாட்டை உணர்த்துவதற்காக மிகவும் சில இடங்களிலேயே இந்த யுக்தியை பயன்படுத்துவர்.

இது ஒரு புறம் இருக்க, “ நான்கில் நல்ல பதில் தேர்வு” செய்வதில் நாம் எத்துனை அக்கறையோடு பதில் அளிக்கிறோம்? இந்தத் தேர்வுகளை அணுகும் நூறு சதவிகிதம் பேரும் அனைத்துக் கேள்விகளையும் முழு தைரியத்தோடு அனுகப்போவது இல்லை. நம் நினைவில் பதிய வைத்திருப்பது ஜெராக்ஸ் காப்பி போன்று நம் கண்களுக்கு வந்து சேர்வது இல்லையே.( சிறிது யோசிக்கையிலே Picture Memory என்பது நினைவுக்கு வருகிறது) நூலகம் போன்று நினைவுகளை வரிசைப்படுத்தி, சரியாகத் தொடர்பு படுத்தி பதில் அளிப்பவர்கள் உண்டு. இதற்க்கான அட்டவனையை மனதின் ஓரத்திலேயும், சிலர் உள்ளங்கை ஓரத்திலேயும், சிலர் கடன்வாங்கியும் பயன்படுத்துவதுண்டு.

இதில் இருந்து நாம் புரிந்து கொள்வது மிகவும் எளிதான செய்திதான். நம்முன் பல்வேறு விருப்பப்பதில்களை வைத்தாலும், அவற்றின் பின்னூட்டத்தை சிறிதேனும் அறிந்து கொள்வது சிறப்பான பதிலைத் தேர்வு செய்வதற்கான நிகழ்தகவை ( probability ) அதிகப்படுத்தும். கேள்வி பற்றியும், பதில் பற்றியும் சிறிதும் பின்னூட்டம் அறியாது எதிர் கொள்வது கேடில் முடியும் என்றால் மிகையாகாது. உங்கள் பதில்களை தேர்வருக்கு அனுப்பும் வரையில், உங்கள் கண்முன் நீங்கள் எதிகாலத்தை நோக்கிய உங்கள் நேர்கோட்டு பயணத்தைத் தொடர்வதற்கு பல்வேறு வாய்ப்புகள் கையில் எட்டும்.

மொத்தத்தில், விரிவான செயல்திட்டம் இல்லைஎன்றாலும் பரவாயில்லை, எந்தச் செயல்/விருப்பம் சிறப்பானதாக அமையும் என்ற பகுத்தறிவு நம் சிந்தனையில் ஊன்றியிருத்தல் அவசியம். கண்ணைக் கட்டி காட்டில் விட்டாலும், நல்ல பாதையில் தானே போகிறோம் என்று நாம் எண்ணுதல் ஆபத்திலே முடியும்.